புதன், 27 ஜனவரி, 2010

பக்கத்து யூனிற் குட்டிப் பெண்கள்.

அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மூன்றரை, இரண்டரை வயதினர். அவர்களது பெற்றோர் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த யூனிட்டை வாங்கி இதில் குடி வந்தனர். இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்கள். வந்த நான்கு மாதங்களில் முதற்குழந்தை பிறந்தாள். அடுத்த வருடத்திலே இரண்டாவது பெண் பிறந்தாள். இருவருமே படு சுட்டிகள். முதலில் அவர்கள் பழகத் தொடங்கியது எங்களோடு தான். முதலில் 'aunty, uncle' என்று அழைத்தவர்கள் இப்போ 'gandma, grandpa' என்று அழைக்கிறார்கள். ஏதும் காரியம் ஆக வேண்டுமானால் 'grandmaji please ' என்று ஐஸ் வைக்கத் தொடங்கி விடுவார்கள். என்னால் ஆகவில்லை என்றால் க்ராண்ட்பாவிடம் போய் விடுவார்கள்.

இவர்களது வால் தனங்கள் எண்ணிலடங்காது. சுனாமி போல் திடீரென நுழைந்து வீட்டை அதகளப்படுத்தி விடுவார்கள். பார்க் போகும் போது வழியில் கதவைத் தட்டி 'We'll see you both in the park' என்று கூறிவிட்டு ஓடி விடுவார்கள்.

உலகிலேயே அருமையான பிள்ளைகளாக மிக அன்பாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள். நடுவில் சண்டை வந்து விடும். அடித்துப் பிடித்து, முடியை இழுத்து சமயங்களில் ஒருவரையொருவர் கடித்தும் சண்டை தொடரும். 'இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கிறது' என்று சொல்லி அவர்களின் தாய் பிணக்கைத் தீர்க்கப் பெரும் பாடு படுவார். இவர்களைப்பற்றி இன்னும் வரும்

சனி, 23 ஜனவரி, 2010

எங்கள் அப்பார்ட்மென்ட் -1



இன்று நான் சமைத்துக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. திறந்த எனக்கு ஆச்சரியம். எங்கள் பக்கத்து யூனிட்டில் வசித்து ஒன்றரை வருடங்களுக்கு முன் வீடு மாறிச் சென்ற நண்பியைக் கண்டதும் ஒரே மகிழ்ச்சி. இங்கு வசிக்கும் போதே விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். சிம்பாப்வே நாட்டவராக இருந்தும் இன்று வரை எங்களை நினைவில் வைத்திருப்பது பெரிய விடயம் தான். உடனே எனக்கு எங்கள் அப்பார்ட்மென்ட் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது.

இங்கு நாங்கள் ஐந்து ஆண்டுகளாக வசிக்கிறோம். பன்னிரண்டு யூனிட்டுகள் உண்டு. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். ஆறு நாட்களில் வீடு விட்டுப் போனவர்களும் மிகச்சில மாதங்களில் விட்டுபோனவர்களும் அநேகர்.

எங்கள் அப்பார்ட்மென்ட் -2

நேற்று walk போய் வரும் போது ஒரு கார் எங்களருகில் வந்து நின்றது. "ஹாய் இது என் தாயார். கொரியாவிலிருந்து வந்துள்ளார்," என்று அறிமுகம் செய்து வைத்தார். "நாங்கள் சில நாட்களில் நாட்டுக்குத் திரும்புகிறோம்," என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் இவரது உறவினர் ஒருவர் பற்றியும் குறிப்பிடவேண்டும். சென்ற வருடம் இங்கிருந்து போன பின்னரும் அடிக்கடி எங்களோடு தொலை பேசியில் பேசுவார். ஆங்கிலம் நன்றாகப் பேச முடியாவினும் எப்படியாவது தான் நினைப்பவற்றை விளங்கப்படுத்தி விடுவார்.


இவர்களைப் போல் இன்னும் பலர் நினைவில் உள்ளனர் . அவர்களைப் பற்றிப் பின்னர் எழுதுவேன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

வலைப்பூ அறிமுகம்


பொழுது போக்கிற்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வலைப்பூ ஒன்றை உருவாக்கும் எண்ணம் உருவானது.

என் இதயத்திலிருந்து எல்லாமே இங்கு பதிவாகப் போகிறது.

நேரம் கிடைக்கும் போது இந்தப் பக்கம் வாருங்கள்.
படித்து விட்டு உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.

நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.